'ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை' -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

'ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை'  -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-
யர்வுப்பாதையின் உன்னதப்பேறு
குரு வாய்த்தலும், குரு வாழ்த்துதலுமேயாம்.
இது அவன் வாழ்வனுபவ வார்த்தைகள்.
'குரு சாட்ஸாத் பரப்பிரம்மா' எனும் பிரயோகம்,
எத்துணை அனுபவம் மிக்கவன் வாயிலிருந்து பிறந்திருக்கும் என,
அவன் எண்ணிப் பார்க்கிறான்.
'அதனைச் சொன்னவனின் அடி பணிகிறது அவன் மனம்.'
இயந்திர மயப்பட்ட இன்றைய உலகத்தார்க்கு,
குரு பக்தியின் உயர்வு புரியுமா?
வேகம் பெற்ற விஞ்ஞானவிரிவின் கீழ்,
மறைந்துபோன மகோன்னதங்களுள் குருபக்தியும் ஒன்றாயிற்று.
குற்றம் நீக்குபவன், இருள் போக்குபவன் என்பதான,
ஆசிரியன், குரு எனும் வார்த்தைகளின் உயர்பொருட்கள்,
(ஆசு-குற்றம் , இரியன் - நீக்குபவன், கு- இருள், ரு- போக்குபவன்)
இன்றைய அவ்வார்த்தைப் பிரயோகங்களுள் அமைந்திருப்பதில்லை.
குருபக்தி எனும் தொடர் சிறிது காலத்தில்,
நம் அகராதியிலிருந்து நீங்கிவிடும் போலத்தெரிகிறது.




காரணம்,
மேற்குலகைப் பின்பற்றும் அவலத்தால்,
ஆசிரியன் ஆசிரியனாய் இல்லாததும்,
மாணவன் மாணவனாய் இல்லாததுமாம்.
ஆசிரியத்தொண்டு இன்று தொழிலாயிற்று.
அதனால் இழிவாயிற்று.
'குருஇல்லா வித்தை பாழ்' எனும்,
மூதாட்டியின் முதுமொழியின் உண்மைக்கு,
அறிவால் அழிவுறும் இன்றைய நம் உலகமே சாட்சியாம்.
நல்லகுரு வாய்ப்பது முன்னைத்தவப்பயன்.
வாய்த்துவிட்டால்? அக்குருவின் அருளால்,
கல்லும் கசிந்து கனியாகும்.
அங்ஙனம் கசிந்து கனியாகிய,
ஒரு கல் சொல்லும்,
குருவின் கதை இது.



அவன் ஒரு மூடன்.
அப்படித்தான் அறிவுமிக்க அவனின் உறவுகள் சொல்லின.
அக்கூற்றில் உண்மையில்லாமலும் இல்லை.
கற்றோர் நிறைந்த அவன் குடும்பத்தில்,
அவன்தான் கடையன்.
பாடசாலை மதிப்பீட்டு அறிக்கைகளில்,
வகுப்பில் ஓரிருவரை மட்டுமே முந்தும் தகுதியே (?) அவனுடையது.
அதுகூட அதிர்ஷ்டத்தால்தான் அமைந்தது.
கல்வியில் பின்தங்கியவன்,
விளையாட்டுக்களில் ஈடுபாடு இல்லாதவன்.
குழப்படியும் செய்யத் தெரியாதவன்.
பிற முயற்சிகளில் பூச்சியமானவன்.
இவையே அவனது தகுதிகளாய் அமைந்தன.



இத்தகுதிகளால் கல்லூரி நாட்களில்,
வகுப்பறைக்கு இவன் வந்தானா? இல்லையா? என்பது கூட,
உடன் கற்றவர்கள் எவருக்கும் தெரியாது.
'செத்தாருள் வைக்கப்பட்டவனாய்' திரிந்தவன் அவன்.
எவ்விதத்திலும் இவன் உருப்படமாட்டான் என்பது,
இவனைத் தெரிந்த எல்லாரதும் முடிவாய் இருந்தது.
அத்தகைய இவ் அசடனை,
ஒரு குருவின் சந்திப்பும், வாழ்த்தும்,
உலகளாவி உயரவும், புகழ்கொள்ளவும் செய்தன.
அவ் அற்புதம் நிகழ்ந்த அதிசயத்தை அவன் உரைக்கக் கேளுங்கள்.



ஏதோ ஒரு பிறவித்தொடர்பாலோ?
அல்லது யாரோ ஒரு மூதாதையனின் பதிவாலோ?
அவனுள் ஒரு துளியளவான இலக்கியரசனைவித்து,
எங்கோ விழுந்து கிடந்திருந்தது போலும்.
அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது.
இல்லாவிட்டால்,
வரமாய் வந்த அந்த வசந்தத்தின் வளத்தினை,
அவன் நுகர்ந்திருக்க முடியுமா?
கல்லென ஒதுக்கப்பட்டிருந்த அவனுள்,
மறைந்துகிடந்த அவ்வற்புத வித்தை,
கடல் கடந்து நின்ற அக்கருமேகம்,
வர்ஷித்து வாஞ்சையுடன் அணைத்து ஆளாக்கிய வரலாற்றை,
அற்புதம் என்பதன்றி வேறென்னென்று உரைப்பதாம்.



அப்போது அவன் வீட்டின் கடைப்பிள்ளை.
தந்தை வாங்கிவரும் சஞ்சிகைகளைத் தன்வயப்படுத்தி,
'வாசித்துக் காட்டினால்த்தான் தருவேன்' என,
மூத்த சகோதரர்களிடம்,
அச்சிறுவயதிலேயே பேரம் பேசினான் அவன்.
அவனை விட இரண்டே வயது மூத்த அவனது தமையன்,
அவன் கோரிக்கையை ஏற்று,
கட்டிலில் படுத்துக்கிடந்து வாசிக்க,
அருகிருந்து கேட்டதே அவனின் முதல் அறிவனுபவம்.
அப்போது 'கல்கி' சஞ்சிகையில்,
இராமாயணத்தை இராஜாஜி எழுதிக்கொண்டிருந்தார்.
கருவிருந்து கதைகேட்ட பிரகலாதனாய்,
கட்டிலிலிருந்து கதை கேட்ட அவனுள்ளும்,
இராமாயணவித்து விழுந்தது போலும்.
வாசிப்பைக் கேட்டவன் பின் வாசிக்கவும் செய்தான்.
கல்லூரிவரை நட்பில்லாதிருந்த அவனுக்கு,
இலக்கியநூல்களே நண்பர்களாயின.
கல்லூரி நூலகம் கருவறையாயிற்று.



அப்போதும் அவனை உலகம் அறிவிலி என்றே சொல்லிற்று.
பரீட்சைப் படிப்பில் அவன் என்றும் அறிவிலிதான்.
இன்றும் அறிவிலிதான்.
உலகின் பரீட்சைத்தராசில்,
அவன் அறிவுப்படிக்கல் பாரம் காட்டவில்லை.
அவன் தட்டு தாழாததால்,
தாழ்ந்தவனாய் அறிவிக்கப்பட்டிருந்தான்.
பின்னாளில் ஒரு பேச்சாளனாய்ப் புகழ் பெறுவான் என்று,
அவன் தன்னைக் கனவிலும் நினைத்ததில்லை.
நினையாததற்கான காரணம் வலிமையாய் இருந்தது.
அவ்வனுபவத்தை இன்று அவன் சொன்னால் யாரும் நம்புவதில்லை.
அவன் மனதிலோ அவ்வனுபவம் இன்றும் பசுமையாய்ப் படிந்தபடி.



அப்போது அவன் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான்.
படிப்பு சிலாபம் எனும் ஊரில்.
தந்தையின் வேலை காரணமாய்ச் சென்று வாழ்ந்த ஊர் அது.
ஓர் நெய்தற் பிரதேசம்.
அவ்வூர், கல்வியறிவில் மிகத்தாழ்ந்திருந்தது.
அது ஒரு கிறிஸ்தவப் பாடசாலை.
மாவட்ட அளவில் நடந்த ஒரு பேச்சுப்போட்டியில்,
தந்தையின் செல்வாக்கால் இவனையும் சேர்த்திருந்தனர்.
பாரதி பற்றிய ஒரு பேச்சு அது.
அப்பேச்சு ஆசிரியர்களால் ஏலவே தயாரித்துத் தரப்பட்டிருந்தது.



போட்டி நடக்கும் தினம்.
நடுவர்கள் அழைக்க அழைக்க,
போட்டியில் கலந்துகொண்ட மாணவர்கள்,
தம் ஆற்றலை அற்புதமாய் அரங்கேற்றினர்.
இவன் பெயர் அழைக்கப்படுகிறது.
தயங்கித் தயங்கி மேடையேறுகிறான் அவன்.
நடுவர்களைப் பார்த்ததும்,
வயிற்றைப் பிசையுமாற்போல ஓர் உணர்வு.
'ம் பேசலாம்' நடுவிருந்த நடுவர் உரைக்க,
கால்கள் நிலைகொள்ளாமல் நடுங்கத் தொடங்கின.
முன் மேசையைக் கைகளால் இறுகப் பற்றிக்கொள்கிறான்.
'பாரதி 1882 ஆம் ஆண்டு எட்டையபுரத்தில் பிறந்தான்;.'
முதல்வரி சொல்லி முடிக்குமுன் மூச்சையடைக்கிறது.



ஒரு வாரமாய்ப் பாடமாக்கிய அத்தனையும் மறந்துபோக,
போர்க்கள இராவணனாய் வெறுங்கையோடு நின்ற அவனை,
'திரும்பச் சொல்லிப்பாரும்' என்கிறார்,
கருணையுள்ள மற்றொரு நடுவர்.
'பாரதி 1882 ஆம் ஆண்டு ......'
இரண்டாம் முயற்சியில் முதலடியிலும் பாதி மறந்துபோகிறது.
அலமந்து நின்ற அவனை,
அனுதாபத்தோடு இறக்கி அனுப்பி வைக்கின்றனர் நடுவர்கள்.
இதுதான் அவனது முதற்பேச்சு அனுபவம்.
இவ்வனுபவம் பெற்றவன்,
பிற்காலத்தில் தான் ஒரு பேச்சாளனாய் வருவேன் என்று,
கனவுதானும் காணமுடியுமா?
ஆசைக்கும் அளவுண்டு அன்றோ?
ஆனால் அவ் அளவைக்கடந்து,
கனவிலும் காணமுடியாத அத்தகுதியை,
அவன் பெற்றான்.
அவன் குருவருளால் நிகழ்ந்த அதிசயம் அது.



அது அவன் எட்டாம் ஆண்டு படித்த நேரம்.
வளர்ந்துவிட்ட பிள்ளைகளின் கல்விக்காக,
தாயோடு பிள்ளைகளை,
யாழ்ப்பாணம் அனுப்பியிருந்தார் தந்தையார்.
ஓராண்டு யாழ்ப்பாண வாசம்.
மிகக் கஷ்டப்பட்டு அவனையும்,
புகழ்பெற்ற யாழ்ப்பாண இந்துக்கல்லூரியில் இணைத்திருந்தார்கள்.
கெட்டிக்கார மாணவர்கள் நிறைந்த கல்லூரி அது.
அங்கு மேலும் மடையனாய்க் கணிக்கப்பட்டுத் தனித்தான் அவன்.
இரண்டு ஆண்டுகளில் அவன் தாயின் கிராமத்தில் குடும்பம் குடியேறியது.
சண்டிலிப்பாய் என்பது அக்கிராமத்தின் பெயர்.
அது மாரியில் மட்டும் ஓடுகிற 'வழுக்கை ஆறைத்' தன்னுள் அடக்கிய மருதநிலப்பூமி.
வயலும் வயல் சார்ந்த இடமுமான அக்கிராமம் அவனை ஈர்த்தது.
வயல் நடுவில் ஓர் ஐயனார் கோயில்.
அக்கோயிலின் களவுபோன ஐயனார் விக்கிரகம்,
இவன் அவ்வூரிற் குடியேறிய அன்றுதான்,
புதிதாய் வார்க்கப்பட்டு வந்து சேர்ந்தது.



வினாடி நேரத்தில் அவனுக்கு ஐயனாரைப் பிடித்துப்போக,
அன்றுதொட்டு ஐயனார் அவன் உறவானார்.
பாடசாலைநேரம் தவிர்த்து,
நாளெல்லாம் பைத்தியக்காரனாய் அங்கேயே படுத்துக்கிடந்தான்.
ஐயனாருக்குப் பூந்தோட்டம்.
ஐயனாருக்குப் பொங்கல்.
ஐயனாருக்குப் புளிக்காப்பு.
ஐயனாருக்குப் பூமாலை.
ஐயனாருக்குப் பிடியரிசி.
இப்படி ஐயனார் ஐயனார் ஐயனார் என்றே,
வாழத்தொடங்கினான்அவன்.



                                                                                             (அடுத்த வாரமும் குருநாதர் வருவார்)
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.